Thursday, October 23, 2008




நண்பர்களே இது செம்மலரில் வெளிவந்த எனது கவிதை....

திருட்டு

திருடர்கள் இருக்கிறார்கள்

திருடர்கள் இருக்கிறார்கள்

திருடர்களால் எல்லாம்

திருடப்படுவதனால்

திருடர்கள் இருக்கிறார்கள்


திருடர்களிடமிருந்து

திருடும் தேவையில்

திருடர்கள் இருக்கிறார்கள்


திருடர்களுக்குள்ளேயே

திருட்டு நடத்தவும்

திருடர்கள் இருக்கிறார்கள்


சேரும் உழைப்பைச்

சேர்த்துத் திருடத்

திருடர்கள் உழைக்கிறார்கள்


திருட்டுக்கொரு

தெய்வம் வைத்து

திருட்டுத் தெய்வம்

தினமும் வணங்கி,

திருட்டுத் தொழிலுக்குத்

திருடர்கள் செல்கிறார்கள்


திருட்டுச் சமூகத்தில்

திருட்டை ஒழிக்கத்

துறையொன்றும் வைத்துத்

திருடுகிறார்கள்


அதிகாரபூர்வமற்ற

திருடர்களைப் பிடிக்க

அதிகாரமுள்ள

திருடர்கள் அலைகிறார்கள்


திருடனைப் பிடிக்கும்

மந்திரப் போர்வையில்

பறந்து பறந்து

பந்தாவாய்த் திருடுகிறார்கள்


பணம், பொருள், புகழ்,

மண், மனிதர், சுகம்,

விலங்கு, தண்ணீர், நாடுகள்,

பெட்ரோல், ஆயுதம், அதிகாரம்,

எழுத்து, கலை, பண்பாடு,

உழைப்பு, நட்பு, உதிரம்,

அன்பு, இதயம், குடும்பம்...


இப்படி எதையேனும் ஒன்றை

வசமாக்கும் முனைப்போடு

எப்போதும் எல்லோரும்

எதையேனும்

திருடிக் கொண்டேதான்

இருக்கிறார்கள்


திருட்டுக் கொடுத்தவரும்

திருடியவரும்

விட்டதை பிடித்ததை

விட்டுப் பிடித்தபடி


திருட்டு விளையாட்டின்

திருட்டுச்சுகம் அனுபவித்து...

திருட்டின் நியாயங்களை

திருட்டின் தர்மங்களை

திருட்டின் போதனைகளை

திருட்டுத் தனமின்றி

நேரடியாய் உபதேசித்து

கணந்தோறும்தினந்தோறும்

திருடி உயிர்க்கிறது

திருட்டுச் சமூகம்

-ஸ்ரீரசா

Tuesday, October 21, 2008

விழிப்பு - கவிதை



நண்பர்களே, தொடர் வேலைப் பளுவின் காரணமாக நாம் சந்தித்து வெகு நாட்களாகிவிட்டன.இது வெகுநாட்களுக்கு முன் நான் எழுதிய கவிதை. பழைய தாள்களைக் கிளறிய போது கிடைத்தது.அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


விழிப்பு

------

மாலை மயங்கும்

மரங்கள் கருக்கும்

சாலை மருங்கில்

சரியும் இருளும்

சோலைக் குயில்களின்

சுரங்கள் ஒடுங்கும்

காலை விடிவெண்ணிக்

கண்கள் உறங்கும்...

உறங்கும் கண்களுக்குள்

உறங்கா நினைவுகள்

இறந்து போயின

எத்தனை கனவுகள்!

திறக்குமோ நாளை

தெரியாத வாசல்கள்?

பறந்த கனவோடு

படுத்துறங்கும் கண்களுமே...

கண்கள் தானுறங்க

கவலைகளும் சேர்ந்துறங்க

மண்ணைப் பிளந்தபடி

மாவிதைகள் கண்விழிக்கும்

விண்ணின் கண்களுமே

விடியல் தான்நோக்கும்

திண்ணம் வாழ்வதினி

திசையெங்கும் சிறகுவிரி!

- ஸ்ரீரசா