Friday, February 1, 2008

மோடிகளும் மகுடிகளும்

மோடிகளும் மகுடிகளும்

-ஸ்ரீரசா

ந்தக் காலகட்டத்தில் முற்போக்கான சமூக மாற்றத்தை விழையும் முற்போக்காளர்களிடம் குழப்பமாகவும் தெளிவாகவும் ஒரு கேள்வி எழுந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரவேட்டை நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது பற்றிய கேள்விதான் அது. கேள்விக்குப் பதிலாகப் பலரும் பலவிதமான வியாக்யானங்களைத் தருகின்றனர்.

காங்கிரஸ்கட்சியின் கையாலாகாத்தனமும், மாயாவதியின் மைய ஆட்சிக் கனவு அரசியலும், இடதுசாரிகளின் பலமின்மையும் பலதரப்பினராலும், பலவித ஏற்ற இறக்கங்களோடும் கூறப்படுகின்றன. சுருக்கமாக இதனைச் சொன்னால், மதவெறி சக்திகள் வெளிப்படையாக ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட தங்கள் வேற்றுமைகளையெல்லாம் மறந்து தேர்தல் களத்தில் தங்கள் செயல்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியதும், மதவெறிக்கு எதிரானவர்கள் அதனைக் குறைத்து மதிப்பிட்டு, வெறும் தேர்தல் அரசியல் கண்ணோட்டத்துடன் பிரிந்து கிடந்ததுமே, மோடி வகையறாக்களுக்கு இத்தகைய வெற்றியைச் சாதித்துக் கொடுத்தது. மனித மாண்புகளின் இதயத்தில் மேலும் கத்தி பாய்ச்சப்பட்டு இரத்தம் வழிகிறது.

தேர்தல் நேரத்தில் வெளிப்படுத்தப்பட்ட ‘தெகல்கா’ இணைத்தள வீடியோ காட்சிகளும், ‘தெகல்கா’ இதழின் நரவேட்டைச் சிறப்பிதழும், வெறும் அறிவுலக அரிப்புகள்போல ஆகிவிட்டன. அவை ஒரு விதத்தில் மதவெறியாளர்களின் வெற்றியைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துவிட்டன. ‘படியுங்கள் பயப்படுங்கள்’ என்கிற தருண் தேஜ்பாலின் முன்னுரை வாசகமும் ஒரு விதமான எதிர்மறைப் பிரச்சாரத்தையே மோடி வகையறாக்களுக்கு வழங்கியது. மேலும் மோடியின் வெற்றி நரவேட்டை மிருகத்தின் நாக்குகளைத் தமிழகத்தை நோக்கியும் திரும்ப வைத்துள்ளது. வாஜ்பாயின் சாந்த முகமூடி, அத்வானியின் தீவிர முகமூடி எல்லாவற்றையும் கிழித்தெறிந்து மோடி தன் பாசிசப் புன்னகை மின்னும் கோரமுகத்தோடேயே பாசிச தேசிய அரசியலின் வெள்ளோட்டம் கண்டுவிட்ட பெருமிதத்தில் தனக்கான மைய இடத்தை பா.ஜ,க, மற்றும் மதவெறியின் அரசியல் கட்டமைப்பில் கோருகிறார்.

மோடியின் வெற்றி, அவர் மக்களுக்குச் செய்த நன்மைகளினாலேயே விளைந்தது என்றிருக்கிறார், தே.மு.தி.க. கட்சியின் தலைவரான, நடிகர் விஜயகாந்த். ஆனால் இங்கே இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றபோது அதிகார துஷ்பிரயோகம் என்று அறிக்கை விட்டார். இல.கணேசன் போன்றோர்கள் அவருக்குப் பாசமுடன் அழைப்பு விடுக்கின்றனர்.

மதவெறி பா.ஜ.க. என்ற சாக்கடையைத் திராவிட நீரோட்டத்தில் முதலில் கலந்த அபகீர்த்தி மிக்க பெருமையுடைய அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெயலலிதாவோ, மோடியை அழைத்து ஊடகங்களின் காமிரா கண்களும், கலர்ப்பக்கக் கண்களும் விரியும்படி பாசிச மோடிக்கு, 54 வகையான உணவு வகைகளைப் பரிமாறி அகமகிழ்ந்திருக்கிறார். ஏற்கெனவே செங்கல் பூஜைக்கு ஆளனுப்பி வைத்ததையும், குஜராத் படுகொலையை வெற்றிகரமாக அமல் நடத்தியதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லியதையும் நினைவுபடுத்தி, அந்தக் கணக்கைப் புதுப்பித்துத் தமிழ்மண்ணில் பூஜை போட்டிருக்கிறார். மோடி இவரைக் குஜராத்துக்கு அழைத்து, கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து எடுத்த பிள்ளைக்கறி, மனிதக் கால் சூப், மனித எலும்புக் குழம்பு என்று ஆயிரம் வகையான உணவுகளைப் பரிமாறலாம்.

ஜெயலலிதா பதவி இழந்து கிடக்கும் தாளாத வக்கிரத்தில், மதவெறியின் முதுகிலேறியேனும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் வீட்டுக்கனுப்பி, அவர்களை விதம் விதமாகப் பழிவாங்கிய நல்லாட்சியை வழங்கலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையும் வெற்றி பெற்ற அதிகார மதவெறி மமதையில் பா.ஜ.க.வின் புதிய மதவெறித் தூதர் அவதாரமெடுத்திருக்கிற நஞ்சு கக்கும் பாம்பான மோடியே மதவெறி மகுடிகளை எடுத்துத் தமிழகம் வந்திருக்கிறார். பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்றோர் வளர்த்த மதவெறி எதிர்ப்புக் குணம் கொண்ட தமிழக மண்ணில் வரலாற்று விநோதங்களின் விளைவாக, வெகுமக்கள் திரள் தலைவர்களாக வளர்ந்து விட்ட, கொஞ்ச நஞ்சம் மதவெறி எதிர்ப்பு ஓடுகிற மனிதர்களிடம், சுதந்திரத்திற்குப் பிந்திய அறுபதாண்டுகளில் அவர்களிடம் மிக மூர்க்கமாக வளர்ந்து கிடக்கும் பதவிவெறி ஆசைகளை மகுடியாக்கி, தன் மதவெறி இசையை இசைத்து, அனகோண்டாவின் வெறியோடு தமிழ் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிற சங் பரிவார் கும்பலின் புதிய முகமாக வந்திருக்கிறார் மோடி.

அவர் பெற்ற வெற்றியைத் துக்ளக் சோ போன்றோர், தங்கள் பத்திரிகையின் ஆண்டு விழாவுக்கு அழைத்து வந்து அவர் வளர்த்து வைத்திருக்கும் அற்ப அறிவு ஜீவிக் கும்பல்களுக்கு இந்துமதவெறி நஞ்சை ஒரு டோஸ் ஏற்றி விட்டு, மதவெறி வரலாற்றுக்கான தங்கள் கடமையை ஆற்றிவிட்டதாகப் புளகாங்கிதம் கொள்கின்றனர். அதைவிட அவர் பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட கருத்துப்படம் ஒன்று, மோடியை ராமராக்கி, ராமர் ஏழு மராமரங்களைத் துளைத்து அம்பெய்த மாதிரி, குஜராத் மாநிலத்தில் ஆணுறைகளில் கூடத் தன் படத்தை அச்சிடச்செய்த வக்கிர புத்தி படைத்த மோடி பல்வேறு பிரச்சாரத் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றதாகச் சித்தரித்துப் பெருமைப்படுத்துகிறது.

ஆனால் மோடியின் மூன்று நாட்கள் தமிழக வருகையை முற்போக்காளர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் என்று கொந்தளித்தனர். ஆனாலும் தமிழக ஊடகங்கள் கிட்டத்தட்ட அதனைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக கல்கி போன்ற ‘நடுநிலை’ இதழ் தனது கேள்வி பதிலில் இந்த ஆர்ப்பாட்டத்தை அர்த்தமற்றது, அபத்தமானது என்று கிண்டலடிக்கிறது. தினமலர் போன்ற இதழ்கள் சார்பாக தமிழ்மக்களின் இதயங்களில் ஜெயலலிதா மோடிக்கு அளித்த விருந்து வண்ணவண்ணமாகப் பரிமாறப்பட்டது. இதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியில் திரண்டுள்ள வாக்களிக்கும் தமிழக வாக்காளர்களில் இருபதுக்கும் மேற்பட்ட சதவீதத் தமிழ்மக்களின் மனங்களில் நரவேட்டை மோடி பற்றிய வெற்றி நாயகச் சித்திரம் பதிய வைக்கப்படுகின்றது.

அதுபோலவே விஜயகாந்தின் மோடியின் வெற்றியைப் பற்றிய அறிக்கையானது தெரிந்தோ தெரியாமலோ அவர் பின்னால் திரண்டுள்ள வாக்களிப்போரில் பத்து சதமான மக்களின் மனதில் மோடியைப் பற்றிய மக்கள் நல நாயகச் சித்திரத்தை வரைய உதவியது.

அதே நேரம் தெகல்கா வெளியிட்ட மோடியின் நரவேட்டைச் சிறப்பிதழைத் தமிழில் மொழி பெயர்த்து தமிழ்மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியானது ஐயாயிரம் பேர்களையாவது சென்றடைந்திருக்குமா என்பது கவலைக்குரியது. சமீபத்தில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாட்டின் இறுதிநாள் பொதுக்கூட்டத்தில் முதுபெரும் தோழர் சங்கரய்யா, தே.மு.தி.க., அ.தி.மு.க.வின் சாதாரணத் தொண்டர்களை நோக்கி, ‘எம்.ஜி,ஆர். இருந்திருந்தால் மதவெறிக்குத் துணை போயிருப்பாரா?’ என முன்வைத்த கேள்வியோ, தமிழகம் மதவெறி சக்திகளின் பின்னால் செல்லாமல் போராட வேண்டும் என தோழர் பிரகாஷ்காரத் விடுத்த அறைகூவலோ இந்த ஊடகங்களால் போகிற போக்கில் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

நமக்கு மதவெறியை மதவெறியாளர்கள் அமல்படுத்திய, வெற்றி கண்ட, அதாவது மதச்சார்பின்மையும், மனித மாண்புகளும் தோற்கடிக்கப்பட்ட சித்திரங்களின் விவரிப்புக்களை விட, மதவெறி எதிர்ப்பு வரலாறுகளும், சித்திரத் தொகுப்புகளுமே இன்று அதிகம் தேவைப்படுகின்றன. பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் என்றான் மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை.

அந்தவகையில் மோடியின் நரவேட்டைக் களத்தில் சொல்லமுடியாத கடும் பாதிப்புக்குள்ளான பில்கிஸ் பானுவின் வழக்கில் மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாயுள்ளது. இது பகுதியளவு வெற்றியென்றாலும், முற்போக்காளர்களும், மனித நல ஆர்வலர்களும் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி.

பெஸ்ட் பேக்கரியில் பலபேரை ஒரே இடத்தில் கொளுத்திக் கொன்றது போல பில்கிஸ்பானுவின் குடும்பத்தையும் உறவினர்களையும் கொன்று குவித்தது சங்பரிவாரக் கும்பல். அதுமட்டுமல்ல, அகமதாபாத் வீதியில் கர்ப்பிணிப் பெண்ணைப் பாலியல் பலவந்தம் செய்து வெட்டிக் கொன்றதோடு, அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தையையும் கீறி எடுத்துத் தீயில் வாட்டியது சங்பரிவாரம். இப்படிப்பட்ட பாசிச வெறியாட்டம்தான் பில்கிஸ்பானு விஷயத்திலும் அரங்கேறியது. பாசிசக் கும்பல் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவருடன் தப்பிச் சென்ற உறவினர் 16 பேர்களையும் கொன்று குவித்தனர். தப்பிப் பிழைத்த பில்கிஸ்பானு பயந்து பயந்து வழக்குப் பதிவு செய்தார். அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறவும் போராடினார். மும்பை தனி நீதிமன்றம் இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளை மறைத்த காவல்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டயையும் விதித்துள்ளது. தீக்கதிரின் தலையங்கம் மிகச் சரியாகக் குறிப்பிட்டிருப்பது போல, மதவெறியின் அபாயம் எவ்வளவு மோசமானது என்பதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கும் இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இந்திய மக்களுக்குப் பாடமாக அமையவேண்டும்.

ஆனால் மதவெறிப் பாம்பின் மகுடிகளுக்கு ஆட எண்ணியிருக்கும் அல்லது ஆடத் துவங்கியிருக்கும் விஜயகாந்த், ஜெயலலிதா வகையறாக்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ, தோழர் சங்கரய்யா சொன்னது போல, கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைச் சொல்லிக்கொள்பவரின் கட்சியைச் சேர்ந்தவர்களும், பெரியாரின் நேரடிச் சீடரான அறிஞர் அண்ணாவைத் தம் கொடியில் தாங்கியிருக்கும் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும், உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை, இல்லாத ராமர் பாலத்தின் பேரால் எதிர்க்கும் சங்பரிவாரக் கும்பலின் குரலை ஜெயலலிதா இங்கே எதிரொலிக்கிறார். அதுபோலவே மோடியின் வருகைக்குப் பின், ராமேசுவரத்தில் 15 பசுக்கள் இறந்ததற்காக முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். மனித மலம் அள்ளுவதைப் புனிதப்படுத்திப் பேசிய நரவேட்டை மோடியின் சகவாசத்தால் பன்றியோடு சேர்ந்த கன்றாகிறார். மோடிக்கு விருந்து வைத்தபின் அனைத்துப் பிரச்சனைகளிலும் பா.ஜ.க. உடன் தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்.

விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர்கள் அன்றாடம் அபாயச் சங்கு ஊதிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் பசுக்களைப் பாதுகாக்கக் குரல் கொடுக்கிறார் ஜெயலலிதா. மக்கள் பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக அரசியலை மதவெறி மயமாக்கப் பா.ஜ.க.உடன் சேர்ந்து முயல்கிறார்.

பாசிசம் உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வந்த காலகட்டமான 1930களிலும் 1940 களிலும் பாசிச எதிர்ப்பு மாவீரன் ஜார்ஜ் டிமிட்ரோவ் பாசிசம் பற்றிக் கூறிய சில நிர்ணயிப்புகள் இன்றும் நம்மைப் பிடித்து உலுக்குகின்றன. அவர் சொல்கிறார்- “நிதி மூலதனத்தின் ஆகப் படுமோசமான, பிற்போக்கான, அளவுக்கதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட, ஆகப் படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத் தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்.”

பாசிசம் நிதி மூலதனத்தின் அதிகாரமாகும். அது தொழிலாளி வர்க்கம், புரட்சிகரத் தன்மை கொண்ட விவசாயிகள், படிப்பாளிகள் பகுதிக்கும் எதிரான பயங்கரமான வன்முறை மிக்க பழி தீர்க்கும் அமைப்பாகும். வெளிநாட்டுக் கொள்கையில் பாசிசம் மிகவும் கொடூரமான வடிவத்திலான இனவெறி கொண்டதும், இதர நாடுகள் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பைத் தூண்டிவிட்டுத் தூபம் போடுவதுமான சக்தியாகும்.”

“பாசிசத்தின் உண்மையான குணாம்சத்தைப் பற்றிக் குறிப்பாக வலியுறுத்திக் கூற வேண்டும். ஏனென்றால் பல நாடுகளில் பாசிசம் சமுதாய வாய்ச்சவடாலுக்குப் பின்பாக மறைந்து கொண்டு, நெருக்கடியின் காரணமாய் வெளியே விரட்டப்பட்டு நிற்கும் சிறு முதலாளித்துவ ஜனப்பகுதியைத் தனது செல்வாக்கின் கீழ் எப்படியோ கொண்டு வந்து வைத்துக் கொள்கிறது. சில சமயம் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளைக் கூடத் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவந்து விடுகிறது.”

டிமிட்ரோவ் கூறும் இத்தகைய கூற்றுக்கள் நமக்கு இந்திய நிலைமைகளின் தற்கால வளர்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொள்ள மிகவும் கைகொடுக்கின்றன. பாகிஸ்தான், சீனா எனப் பூச்சாண்டி காட்டும் இந்து பயங்கரவாதத்தின் கோரமுகங்களையும், இந்திய நடுத்தர மக்களை அது குறிவைத்துத் தன் வலைப்படுத்துவதும், அதைவிடக் குஜராத் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் செல்வாக்கு மிக்க ஒரு பகுதி மக்களைக் கலவரச் செயல்பாட்டின் பிரதான நடவடிக்கையாளர்களாகக் களமிறக்கியதும் நமக்கு டிமிட்ரோவின் வரையறுப்புக்களையே நிச்சயம் செய்கின்றன.

அதைவிட டிமிட்ரோவ் சொல்லும் இன்னொரு வாசகம் இந்நேரம் நாம் சமூக மாற்றத்தை விரும்பும் முற்போக்காளர்கள் நினைவிலிருத்த வேண்டிய ஒன்றாகும். அவர் கூறுகிறார்: “ பாசிசத்தின் வெற்றியின் குணாம்சம் என்ன? இந்த வெற்றி ஒரு பக்கம் பாட்டாளி வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து அதனுடன் கூட்டாளியாக நிற்கும் சமூக ஜனநாயகத்தின் சீர்குலைவுக் கொள்கையின் காரணமாய் அமைப்பு ரீதியில் வலுவிழந்து பாட்டாளி வர்க்கம் சிதறிச் சின்னா பின்னமாகிக் கிடப்பதைக் காட்டுகிறது. மறுபுறத்தில் முதலாளி வர்க்கம் தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் உருவாவதைக் கண்டு பயப்படுகின்றது. புரட்சியைக் கண்டு பயப்படுகின்றது. முதலாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தைத் தனது பழைய முறைகளில் – முதலாளிய ஜனநாயகம், மக்களவை மன்றங்கள் மூலம் - நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது.”

மேலும் அவர் கூறுகிறார்: “ பாசிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரணமான முறையில் ஒரு முதலாளித்துவ அரசு போய் அடுத்த ஒரு முதலாளிய அரசு வருவதைப் போலல்ல. முதலாளிய வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து, அதாவது முதலாளித்துவ ஜனநாயத்திலிருந்து அடுத்த வடிவம், பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சர்வாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும். இந்த வேறுபாட்டை நாம் தெளிவாகக் காண வேண்டும். இல்லாவிடில் நாம் தவறிழைத்து விடுவோம். அந்தத் தவறு பாசி°டுகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆபத்தை எதிர்த்துள்ள போராட்டத்தில் நகரத்திலும் கிராமப் புறங்களிலுமுள்ள விரிவான மக்கள் பகுதிகளை ஒன்று திரட்டுவதிலிருந்தும், முதலாளி வர்க்கத்திற்கிடையேயுள்ள முரண்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்தும் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தைத் தடுத்துவிடும்.”

களம் நம் முன் தெளிவாக இருக்கிறது. ஒரு புறம் இந்திய நாட்டின் இறையாண்மையை விழுங்கத் துடிக்கும் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்கள். இன்னொருபுறம் தம் பதவி வெறியையும், அற்ப அதிகாரங்களை நோக்கிய வாய்ச்சவடால் நிரம்பிய முதலாளித்துக் கட்சிகளின் பல்வேறு குழப்பமான சதுரங்கக் காட்சிகளும், மதம், சாதி, இனம், மொழி, பால் ரீதியான இன்னபிற பிளவுகளுக்குள் சிக்குண்ட மக்களும், தம் ஏகாதிபத்தியச் சார்புக் கொள்கைகளால் மக்கள் நலனைக் காவு கொடுக்கும் முதுகெலும்பற்ற மத்திய ஆட்சியாளர்களும், இந்திய தேசத்தைப் பாசிச சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்க வைக்க முழுவீச்சில் செயல்படும் இந்து மதவெறி பயங்கரவாதிகளும், அவர்களை எதிர்கொள்வதாய்ச் சொல்லிக்கொள்ளும் இ°லாமிய மற்றும் இன்னபிற அடிப்படைவாத பயங்கரவாதிகளும், இவர்களையெல்லாம் ஊட்டி வளர்க்கிற வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் சூழல்களும் இடது சாரிகளுக்கும், மக்கள் நல விரும்பிகளுக்குமான எதிர்நிலையாக இருக்கின்றன.

மாமேதை மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதானால், “ பிரச்சனை உலகைப் பற்றிய வியாக்கியானமல்ல, மாறாக அதனை மாற்றுவதே.” எனவே களமிறங்குவோம். மதவெறிப் பாசிசத்தையும், அதன் உடன்நிலையான ஏகாதிபத்தியத் திமிர்களையும் கருவறுப்போம்.

No comments: